

17 மொழிப் படங்களை எடிட்டிங் செய்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.
1980-களில் தொடங்கி தற்போது வரை பல்வேறு மொழிப் படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீகர் பிரசாத். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளின் முன்னணி இயக்குநர்கள் படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'சாஹோ', 'சைரா', 'சூப்பர் 30', 'செக்கச்சிவந்த வானம்', 'காலா', ‘சர்கார்’, 'காற்று வெளியிடை' என பல படங்கள் இவருடைய எடிட்டிங்கில் வெளியாயின. முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் படங்கள் என்றாலே ஸ்ரீகர் பிரசாத்தான் எடிட்டிங் என்று கூறலாம். அந்த அளவுக்கு அனைத்து இயக்குநர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளார்.
தற்போது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவருடைய பெயர் இடம் பிடித்துள்ளது. 17 மொழிப் படங்களுக்கு இவர் எடிட்டிங் செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, சிங்களம், கர்பி, மிஷ்ஷிங், போடோ, பங்சென்பா ஆகிய மொழிப் படங்கள் இவருடைய எடிட்டிங்கில் வெளியாகியுள்ளன.
லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற ஸ்ரீகர் பிரசாத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவருடைய எடிட்டிங்கில் 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', 'பிரபாஸ் நடித்து வரும் படம்', 'ஆர்.ஆர்.ஆர்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.