

'ஜகமே தந்திரம்', 'பூமி' மற்றும் 'சக்ரா' ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' மற்றும் சூர்யா நடிக்கும் 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. பெருவாரியான திரையரங்குகள் இந்தப் படங்களுக்கே ஒதுக்கப்படும். இதனால் பல படங்கள் மே 1-ம் தேதி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'பூமி' படமும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் தவிர்த்து விஷால் நடித்து வரும் 'சக்ரா' படமும் மே 1-ம் தேதி வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'மூக்குத்தி அம்மன்' படமும் மே 1-ம் தேதி வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது.
'ஜகமே தந்திரம்', 'பூமி' மற்றும் 'சக்ரா' ஆகிய படங்கள் வெளியாவதால் 'மூக்குத்தி அம்மன்' வெளியாவது சந்தேகமே என்கிறார்கள் திரையுலகில். மேலும், விரைவில் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. அதில் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.