

இயக்குநர் கவுதம் மேனனிடம் பணிபுரிந்தபோது அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன என்பதை சமந்தா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பின் மூலமே சமந்தா நாயகியாக அறிமுகமானார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் 'யே மாய சேஸாவே' மற்றும் 'நீதானே என் பொன்வசந்தம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் சமந்தா. முதல் படத்தில் நாயகியாக நடித்து வெளியான இருந்த பயம் தொடர்பான கேள்விக்கு சமந்தா, "எந்த வேலை செய்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பேன். யாரும் என்னைப் பார்த்துக் குறை சொல்லிவிடக் கூடாது என்று இருக்கும். 'யே மாய சேஸாவே' (விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்) வெளியீடு வரை நான் தொடர்ந்து அச்சத்தில் இருந்தேன். நிறைய ஏமாற்றங்களை, நிராகரிப்புகளைச் சந்தித்தேன். அது அந்த அச்சத்தை இன்னும் அதிகமாக்கியது. அந்தத் தாக்கம் சில காலம் இருந்தது.
நீண்ட காலம், உனக்குத் திறமை போதவில்லை. அவ்வளவு சிறப்பாக நடிக்கத் தெரியவில்லை என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு சிந்தனை தினமும் தோன்றும். ஒரு கட்டத்தில் நான் அதில் உறுதியாகவே இருந்தேன். அது என்னை மன ரீதியாகவும், ஆரோக்கியத்தையும் அதிகம் பாதித்தது. சிதைத்தது.
வயது ஆக ஆகத்தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. அந்த அச்சத்தைத் தாண்டி, சரி பரவாயில்லை என்ற மனநிலை வந்தது. எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்கு வருவதைச் சிறப்பாகச் செய்வோம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இந்த எண்ணம் வரவே பல வருடங்கள் ஆகிவிட்டன. துறைக்கு வரும் புதிய பெண்களுக்கு ஆரம்பத்திலேயே இப்படியான மனநிலை இருந்தால் நல்லது என நினைக்கிறேன். தங்கள் பலம் என்ன என்பது புரிந்து அதில் சிறந்து விளங்க வேலை செய்தால் நல்லது" என்று பதிலளித்துள்ளார் சமந்தா.
அதனைத் தொடர்ந்து 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நடித்தபோது கவுதம் மேனனிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன என்ற கேள்விக்கு சமந்தா பதில் அளிக்கையில், "கவுதம் மேனனுக்கு கட் சொல்வதே பிடிக்காது. தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருப்பார். ‘யே மாய சேஸாவே’ படத்தில் நடித்த போது எனக்குத் தெலுங்கு சுத்தமாகத் தெரியாது.
கவுதம் மேனனிடமிருந்து கற்றுக்கொண்டது, காட்சியில் எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி என்பதுதான். அதற்கு நிறைய தன்னம்பிக்கை தேவை. ரசிகர்கள் நம் ஆன்மாவைப் பார்க்க வைக்க வேண்டும் என்பது முக்கியம். கவுதம் மேனன் எனக்கு அதைக் கற்றுக்கொடுத்தார். இதைச் செய்வது கடினம். கேமரா இருப்பதை மறக்க முடியாது.
ஆனால், அது இல்லாதது போல நடிக்க வேண்டும். நான் வசனங்களைப் பேசுவதிலேயே கவனமாக இருந்தேன். வேகமாக என் வசனத்தைப் பேசிவிட்டு காட்சி முடித்துவிட்டதாக நினைப்பேன். கவுதம் மேனன்தான் காட்சி என்பது வசனம் பேசுவது அல்ல என்பதை எனக்குக் கற்றுத் தந்தார். நீங்கள் பேசுவதற்கு நடுவில் இருக்கும் இடைவெளிதான் முக்கியம் என்பதைப் புரிய வைத்தார். அவர் இயக்கத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் மீண்டும் நடிக்கும்போது எளிதாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியான நாளில் ரசிகர்கள் எனக்குச் செய்திகள், வாழ்த்துகள் அனுப்புவார்கள். படம் வெளியானபோது நீங்களெல்லாம் எங்கு இருந்தீர்கள் என்று எனக்குத் தோன்றும்” என்று சமந்தா கூறினார்.