மீண்டும் இணையவாசிகள் உதவியை நாடும் இமான்

மீண்டும் இணையவாசிகள் உதவியை நாடும் இமான்
Updated on
1 min read

இரண்டு பாடகர்களைத் தொடர்பு கொள்வதற்காக மீண்டும் இணையவாசிகளின் உதவியை நாடியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

தொடர்ச்சியாக தான் இசையமைக்கும் படங்களில், புதிய பாடகர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருபவர் இசையமைப்பாளர் இமான். பிறவியிலேயே பார்வையற்றவரான திருமூர்த்தி பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இணையவாசிகளின் உதவியுடன் அவரைத் தொடர்புகொண்டு பேசி, 'சீறு' படத்தில் அவருக்குப் பாட வாய்ப்பு வழங்கினார்.

'சீறு' படத்தில் இமான் இசையில் திருமூர்த்தி பாடிய 'செவ்வந்தியே' பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் 2 பாடகர்களின் விவரங்களைக் கேட்டு, இணையவாசிகளின் உதவியை நாடியுள்ளார் இமான்.

இது தொடர்பாக இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, தனது ட்விட்டர் பதிவில் இமான், "மீண்டும் உங்கள் உதவியை நாடுகிறேன் அன்பு நண்பர்களே. இந்த அற்புதமான பாடும் திறமை கொண்டவர்களைத் தொடர்புகொள்ள எனக்கு உதவுங்கள்.

முதல் படத்தில் இருப்பவரின் பெயர் தெரியவில்லை. இரண்டாவது படத்தில் இருப்பவர் ராகேஷ். அவர் பாடிய 'உன்னை காணாத' பாடல் சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது" என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.

தற்போது இமான் இசையில் 'அண்ணாத்த' படத்தின் பாடல்கள் உருவாகி வருகின்றன. இதனால், இமான் குறிப்பிட்ட இருவரும் ரஜினி படத்தில் தான் பாடவுள்ளனர் என்று அவரின் ரசிகர்கள் உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in