

எனது காதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2', 'பொம்மை', 'குருதி ஆட்டம்', 'கசடதபற', 'பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இதில் 'பொம்மை', 'குருதி ஆட்டம்', 'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்.
சில நாட்களுக்கு முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவும் ப்ரியா பவானி சங்கரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவின. இதற்கு எஸ்.ஜே.சூர்யா அவர் எனது தோழி என்று பதிலளித்திருந்தார். ஆனால், ப்ரியா பவானி சங்கர் தரப்பில் எவ்வித மறுப்புமே தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், காதலர் ராஜ் பிறந்த நாளன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் காதலை உறுதிப்படுத்தினார் ப்ரியா பவானி சங்கர். முன்னணி நடிகையாக இருக்கும்போதே, தன் காதலரை அறிமுகப்படுத்தியது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இதனிடையே, தான் காதலில் இருப்பதை அறிவித்தது தொடர்பான கேள்விக்கு ப்ரியா பவானி சங்கர் பதில் அளிக்கையில், "என் காதலர் ராஜ் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு வைரலாகிவிட்டது. கடந்த ஆண்டு கூட நான் அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். நாங்கள் வெகுளியாக இருந்த இளம் பருவத்திலேயே சந்தித்துக் கொண்டோம்.
அப்போது இருந்த அன்பும், வெகுளித்தனமும் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது. நாளை எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளைப் பார்த்துக் கொள்ள ஏற்றவராக ராஜ் இருப்பார். என் காதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கல்யாணம் குறித்து சீக்கிரமே சொல்கிறேன்" என்று ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.