

சமந்தாவின் உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்று அவருக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் சின்மயி புகழாரம் சூட்டியுள்ளார்.
2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இன்றுடன் (பிப்ரவரி 26) இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சம்பந்தப்பட்ட அனைவருமே தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேஸாவே' படத்தின் மூலம் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார் சமந்தா. தமிழிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆகையால், இன்றுடன் சமந்தாவும் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படம் தொடங்கி சமந்தாவுக்கு தொடர்ச்சியாகப் பின்னணிக் குரல் கொடுத்து வருபவர் சின்மயி.
சமந்தா திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சின்மயி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அவரது குரலாக இருப்பது மிகச் சிறந்த கவுரவம். இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே ப்ரதியூஷா அறக்கட்டளையைத் தொடங்கி இல்லாதவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். அவருடைய வலிமையையும் உறுதியையும் கண்டு நான் வியக்கிறேன்.
சமூக வலைதளங்களில் பலர் அவர்களாகவே சமந்தாவின் ஒட்டுமொத்த குடும்பமும் அவரைக் கட்டுப்படுத்தவேண்டும், அவர் ஒரு திருமணமான பெண்ணாக நடந்து கொள்ளவேண்டும், அவரது குடும்பமும் கூலாக இருக்கும்போது அவர் மட்டும் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று ட்வீட் செய்வது போன்ற விஷயங்களை ஒரு முன்னணி நடிகையாக அவர் உடைக்கிறார்.
பெரும்பாலான இந்தியர்களிடம் ஒரு நடிகை திருமணமான உடனே நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று விரும்பும் போக்கு இருக்கிறது. நிச்சயமாக இந்த விதி ஆண்களுக்குப் பொருந்தாது. ஆண்களைப் பொறுத்தவரை ‘வேலை’ என்கிற விஷயம் பெண்கள் அதுவும் குறிப்பாக நடிகை என்று வரும்போது ‘நீங்கள் எப்படி இன்னும் வேலை செய்கிறீர்கள்?’ என்று வருகிறது.
சமந்தாவைப் பொறுத்தவரை அவர் விரும்பும் வேலையைச் செய்யக்கூடாது என்று சொல்லும் ஒரு சமூகத்தில் சிறப்பாக வாழ்வதே ஒரு சாதனை தான். அவருடைய உறுதித் தன்மையிலிருந்து பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்று விரும்புகிறேன். அவர் கடுமையாக உழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்''.
இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.