''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் 

''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் 
Updated on
1 min read

'இந்தியன்- 2' திரைப்படப் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் தான் சிக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், லைகா தயாரிக்கும் ’இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 19-ம் தேதி அன்று சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது கிரேன் விழுந்து ஏற்பட்ட கோர விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்திலிருந்து கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்று கூறாமல், 'இந்தியன் 2' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விபத்து நடந்த தினத்திலிருந்து மௌனம் காத்து வந்த இயக்குர் ஷங்கர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். தனது பதிவில், "மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த நாளிலிருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்துத் தூக்கம் வருவதில்லை.

நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால், அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்" என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in