

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள, இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர், பாடல் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டுமே இப்போது வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தின் கதை எந்த மொழியில் வெளியானாலும் வெற்றி பெறும் என்றும், இந்தியில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை எனவும் குனீத் மோங்கா அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.