'தலைவி' படத்தில் அவமானம், துரோகம்: ஏ.எல்.விஜய் மீது அஜயன் பாலா சாடல்

'தலைவி' படத்தில் அவமானம், துரோகம்: ஏ.எல்.விஜய் மீது அஜயன் பாலா சாடல்
Updated on
1 min read

'தலைவி' படத்தில் அவமானம், முதுகில் குத்தல் என இயக்குநர் ஏ.எல்.விஜய்யை கடுமையாகச் சாடியுள்ளார் எழுத்தாளர் அஜயன் பாலா

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் நெருங்கிய நண்பர் எழுத்தாளர் அஜயன் பாலா. ஏ.எல்.விஜய்யின் படங்களின் கதை விவாதம் மற்றும் வசனங்கள் என எழுதி வந்தார். அவருடைய இயக்கத்தில் வெளியான 'தியா' மற்றும் 'லட்சுமி' ஆகிய படங்களில் வசனகர்த்தா அஜயன் பாலா தான்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'தலைவி' படத்தின் கதை விவாதத்திலும் பணிபுரிந்திருக்கிறார் அஜயன் பாலா. ஆனால், நேற்று (பிப்ரவரி 24) வெளியிடப்பட்ட 'தலைவி' படத்தின் போஸ்டரில் அஜயன் பாலாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.எல்.விஜய்யை கடுமையாகச் சாடியுள்ளார் அஜயன் பாலா. இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் அஜயன் பாலா கூறியிருப்பதாவது:

”சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தைப் பலமுறை சந்திருந்திருந்தாலும் ’தலைவி’ படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை . இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாகப் பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரைச் சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்தது தான் நான் அவமானப்படுத்தப்படக் காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக்கொண்டேன்.

இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் முதுகு குத்தல் தான் . இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போது கூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்குக் கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல.

இப்படி எழுதியதால் எனக்கு முறையாகச் சேர வேண்டிய சம்பளப் பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”

இவ்வாறு அஜயன் பாலா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in