

'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் விபத்து நடைபெற்றதைத் தொடர்ந்து, தங்களுடைய படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) வசதியை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செய்து கொடுத்துள்ளார்.
ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் கிருஷ்ணா, மதுசூதனராவ் மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்த விபத்தில் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் தப்பித்துள்ளனர். மேலும், திரையுலகினர் பலரும் 'இந்தியன் 2' படக்குழுவினருக்கு ஆறுதல் கூறினார்கள். இதைத் தவிர்த்து, இனிமேல் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இதனை முதன் முதலாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது 'மாநாடு' படக்குழு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 2 நாட்கள் முடிந்துள்ளது.
'இந்தியன் 2' படப்பிடிப்புத் தள விபத்தைத் தொடர்ந்து, தனது 'மாநாடு' படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் இன்சூரன்ஸ் செய்துள்ளார். 30 கோடி ரூபாய் மதிப்புக்குக் காப்பீடு செய்துள்ளார். இதன் ப்ரீமியம் தொகை ஜிஎஸ்டி வரி சேர்த்து சுமார் 7.8 லட்ச ரூபாயாகும். 'மாநாடு' படக்குழுவினரின் இந்த முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.