

'தலைவி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரில் படமாக உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இதற்காக பிரத்யேக மேக்கப், பரதநாட்டியப் பயிற்சி என மெனக்கிடல் செய்துள்ளார்.
இதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, சசிகலாவாக ப்ரியாமணி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
'தலைவி' படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது குறித்து பூர்ணா கூறுகையில், "ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் நான் நடிக்கிறேன் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். இரும்பு மனிதி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்தில் நடிப்பதும், கங்கணா ரணவத், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் உடன் நடிப்பதும் உண்மையில் அற்புதமான வாய்ப்பு" என்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக விஷால் விட்டல் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.