

இதுபோன்ற சிந்தனையை வளர்க்க வேண்டாம் என்று சமந்தா தொடர்பான செய்திக்கு அதிதி ராவ் பதிலளித்துள்ளார்.
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற '96' படத்தை 'ஜானு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். '96' படத்தை இயக்கிய பிரேம்குமாரே, தெலுங்கு ரீமேக்கையும் இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது 'ஆர்.எக்ஸ்.100' படத்தின் இயக்குநர் அஜய் பூபதி தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார். 'மகா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிப்பதாக இருந்தது. பின்பு, ரவி தேஜா ஒப்பந்தமானார். ஆனால், அஜய் பூபதி வெளியிட்ட ட்வீட் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இந்தப் படத்திலிருந்து விலகினார் ரவி தேஜா.
தற்போது சர்வானந்த் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், 'ஜானு' தோல்வியால் இந்தப் படத்திலிருந்து சமந்தா விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமந்தாவுக்குப் பதிலாக அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு அதிதி ராவ் தனது ட்விட்டர் பதிவில், "இதைச் சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு படத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நடிகர் மீது இருக்கும் நம்பிக்கையை எடுத்துவிடாது. இதுபோன்ற சிந்தனையை வளர்க்க வேண்டாமே.
ஒரு இயக்குநர்/தயாரிப்பாளர் அவர்கள் சரி என்று நினைக்கும் விதத்தில் அவர்கள் படத்தைப் பற்றி அறிவிக்கும் மரியாதையை அவர்களுக்குத் தருவோம்" என்று தெரிவித்துள்ளார் அதிதி ராவ்.
விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.