

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்துக்கு 'அண்ணாத்த' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'தர்பார்' படத்தை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்தப் படத்துக்கு முதலில் தலைப்பிடவில்லை. ஆகையால் 'தலைவர் 168' என்று அழைத்து வருகிறார்கள்.
இதனிடையே 'தலைவர் 168' அப்டேட் இன்று (பிப்ரவரி 24) மாலை 6 மணிக்கு என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமானார்கள். தற்போது 'தலைவர் 168' படத்துக்கு 'அண்ணாத்த' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'அண்ணாத்த' படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் படத்தின் வெளியீடு எப்போது என்பது உறுதியாகவில்லை.