

நீண்ட நாட்களாகப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த நடிகர் சிம்பு, நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
அப்போது அவர் பேசும்போது, ''சிறு வயதில் இருந்தே உங்களின் அன்பால் நடித்து வருகிறேன். இடையில் எனக்காக சிறு இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன். இனி உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன். உங்களோடு தான் இருப்பேன்.
நாம் ஜெயித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நம்மைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கும். ஆனால், என் தோல்விகளின்போது என்னோடு நீங்கள் அனைவரும் நின்றீர்கள். உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்'' என்று சிம்பு பேசினார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.