வேண்டுகோள் விடுத்த கே.ராஜன்: யோகி பாபு ஒப்புதல்

வேண்டுகோள் விடுத்த கே.ராஜன்: யோகி பாபு ஒப்புதல்
Updated on
2 min read

'பரமபதம் விளையாட்டு' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கே.ராஜன் விடுத்த வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டுள்ளார் யோகி பாபு

24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் திருஞானம், இசையமைப்பாளர் மானஸி, விஜய் வர்மா ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

இங்கு ட்ரெய்லரைப் பார்க்கும் முன்பே முழுப்படத்தையும் பார்த்துவிட்டேன். படம் பார்ந்து அதிர்ந்துவிட்டேன். த்ரிஷா பிரமாதமாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரீஷ் படத்தின் பின்னணி இசையைப் பிரமாதமாக செய்துக் கொடுத்துள்ளார். அனைவரிடமும் இயக்குநர் திருஞானம் அற்புதமாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு இயக்குநர் தான் காரணம். ஆகையால் தான் தயாரிப்பாளர்கள் அனைத்து நம்பிக்கையையும் இயக்குநர் மீது வைக்கிறோம்.

புதுமுகம் விஜய் வர்மாவின் நடிப்பு முதல் படம் போல தெரியவில்லை. எதிர்காலத்தில் மிகப் பெரிய நடிகராக வருவார் விஜய் வர்மா. இயக்குநருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் மற்றவர்களை வளர்த்துவிட்டு, அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னை வளர்த்துவிட்டவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுமி மானஸ்வி பேசமுடியாமல் நடித்து அனைவரும் அவரைப் பற்றி பேசும்படி வைத்துவிட்டார்.

அதே போல், யோகி பாபு வளர்ந்து வரும் சமயத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்துக்கு டப்பிங் பேசணும் அல்லவா. இப்போது ஒரு நாளைக்கு 10 லட்சம் கொடுப்பார்கள். அன்றைக்கு 10 ஆயிரம் கொடுத்தவருடைய படம் 3 ஆண்டுகளாக நிற்கிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நான், சிவா சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் பேசிவிட்டோம். அவருடைய உதவியாளர் சசி என்பவர், இதோ வந்து பேசிவிடுவார் என 4 மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். பின்பு யோகி பாபு தொலைபேசியில் வெளியூரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் பேசிவிடுகிறேன் என்றார். அரை நாளில் முடிக்க வேண்டிய டப்பிங்கை இன்னும் முடிக்கவில்லை.

கடந்த 10 நாட்களாக தொலைபேசியில் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது சுந்தர்.சி படத்துக்காக வெளியூரில் இருக்கிறாராம். அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். மார்ச் 7-ம் தேதி சென்னை வரவுள்ளதாக சொன்னார்கள். 8-ம் தேதி இந்தப் படத்தின் டப்பிங்கை பேசி முடித்துவிடுங்கள். அந்தப் பணியை முடித்துவிட்டு, எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடித்து ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர்களும் கெட்டுப் போவதற்கே கொடுக்கிறார்கள்.

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தயாரிப்பாளர் கே.ராஜனைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார் யோகி பாபு. அண்ணே.. நீங்கள் பேசியது போல் 10 லட்சம் எல்லாம் வாங்கவில்லை. சிறு தயாரிப்பாளர்களிடம் குறைவாகத் தான் வாங்குகிறேன். இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படப்பிடிப்பில் இருக்கிறேன். மார்ச் 9-ம் தேதி சென்னை வந்தவுடன், டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார் யோகி பாபு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in