

நகுல், கல்பனா, சங்கர் மகாதேவன், சித்ரா விஜய் தொலைக்காட்சியின் ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சி இந்த வாரம் முதல் சேனல் அரங்குக்கு வருகிறது. இந்நிகழ்ச்சி 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறந்த குரல் தேடல் படலமாக தொடங்குகிறது.
நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களை திரை இசைத் துறைக்கு அறிமுகம் செய்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து அல்கா அஜித், ஆஜித் காலீக், ஸ்பூர்த்தி, ப்ரிதிகா, ஹ்ரிதிக் ஆகியோர் முறையே பட்டத்தை வென்றுள்ளனர். பாடகி சின்மயி, நடிகர் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, திவ்யா, பாவ்னா பாலகிருஷ்ணன் மற்றும் பலர் இதுவரை இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, மால்குடி சுபா, உஷா உதுப் மற்றும் பலர் முந்தைய சீசன்களிள் நடுவர்களாக இருந்துள்ளனர். இந்த சீசன் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 7’- ல் பிரபல பின்னணிப் பாடகர்களான சங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.
நடிகர் நகுல் ஒரு பாடகராக இந்தப் போட்டியின் நடுவராக இடம்பெறுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்க உள்ளனர்.