

சமீபகாலத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இருந்து சற்று தள்ளி நின்ற லட்சுமி ராமகிருஷ்ணன், கலைஞர் தொலைக்காட்சியின் ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சி வழியே மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக சேனல் தரப்பில் கூறும்போது, ‘‘தவறுகள்தான் குற்றங்களுக்கு காரணம். நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள்கூட பின்னாளில் நமது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடலாம்.
குற்றம் செய்யும் யாரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதே இல்லை. தன்னுடைய தவறை நியாயப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். இதை முன்மாதிரியாக வைத்தே, சமுதாயத்தில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
இவ்வாறான சமூக அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேசத் தயங்குகிற பல்வேறு விஷயங்களைத் தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி, அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ள ஒரு மேடைதான் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்’’ என்றனர்.