

புதிய திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்கள் வரை தொலைக்காட்சிகளிலும், 8 வாரங்கள் வரை டிஜிட்டல் திரைகளிலும் ஒளிபரப்பக் கூடாது என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டுக் கூட்டம் நேற்று முன் தினம் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணத்தோடு ஜிஎஸ்டி (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்பிடி (8%) கேளிக்கை வரி செலுத்தப்படுகிறது. இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் எல்பிடி வரியை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும்.
‘தர்பார்’ திரைப்படத்தை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் நடிகர், இயக்குநரிடம் பேசி சுமூக தீர்வு காணப்படும்.
புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலம் வரை டிஜிட்டல் திரை என்று அழைக்கப்படும் அமேசான் , நெட்ப்ளிக்ஸ் போன்றவற்றில் வெளியிடக் கூடாது. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் அதை ஒளிபரப்பக் கூடாது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.