விஷால் அணிக்கே என் ஆதரவு: மனம் திறந்த குஷ்பு
நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணியினருக்கே என் ஆதரவு என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்கப் பொறுப்பில் இருந்தவர் நடிகை குஷ்பு. தற்போது குழந்தை வளர்ப்பு, அரசியல், படத் தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என பல்வேறு பணிகளால் நடிகர் சங்கப் பொறுப்பில் குஷ்பு இல்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் என இரு அணியினர் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்கள். இவ்விரு அணிகளில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று குஷ்புவிடம் கேட்ட போது:
”நடிகர் சங்க விவகாரத்தில் கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆகையால், விஷால் அணிக்கே எனது ஆதரவு. சரத்குமார், ராதாரவி இருவருமே எனக்கு நண்பர்கள் தான். சரத்குமாரின் 100வது படத்தில் நடித்திருக்கிறேன், ராதராவி அண்ணா நான் நடித்த முதல் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தவர்.
நடிகர் சங்க விவகாரத்தில் இளம் ரத்தம் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விஷால் அணியினருக்கும் ஒரு வாய்ப்பு அளித்து பார்க்கலாம்.
மேலும், 'வில்லு', 'ஸ்டாலின்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிப்பதை நிறுத்துவிட்டேன். எனக்கு ஏற்றார் போல கதைகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டுமன்றி எனக்கும் குழந்தைகள், அரசியல், டிவி ஷோக்கள் என பணிகள் நிறைய இருக்கிறது. இதனால் தான் நான் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதைக் கூட நிறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
