Published : 20 Feb 2020 05:13 PM
Last Updated : 20 Feb 2020 05:13 PM

ரூ.1 கோடி நிதியுதவி; கடைநிலை ஊழியனுக்கும் இனி பாதுகாப்பு: 'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்து குறித்து கமல் பேட்டி

'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தின் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கும் காயமுற்றவர்களுக்கும் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார் கமல்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தற்போது படத்தின் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நேற்றிரவு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படவர்களை, கமல் நேரில் சென்று பார்த்தார். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 20) உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:

"சிறுவயதிலிருந்து இந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். ஆனால், இந்தத் தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதற்கான இன்னொரு அசம்பாவிதம் இங்கு நடந்துள்ளது. இன்று காலையில் கூட நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். இதுபோன்ற இன்னொரு நிகழ்வு நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அது அனைத்தையும் திரைத்துறை செய்ய வேண்டும்.

100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் என மார்தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான ஒரு பாதுகாப்பை அளிக்க முடியாத ஒரு துறையாக இருப்பது அவனமாத்துக்குரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் முடிந்தது இந்தக் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன்.

இது இறந்த உயிருக்கான இழப்பீடு அல்ல. அவர்கள் சிலர் ரொம்பவே ஏழை மக்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பு கூட நானும் விபத்தில் சிக்கினேன். அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். என்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் இங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளேன் என்று பெருமையுடன் சொன்னார். இன்று அவர் உயிருடன் இல்லை. மதுசூதனராவ், சந்திரன் ஆகியோரும் இன்று இல்லை. நான் அறிவித்த இந்தத் தொகை சேதத்துக்கான பரிகாரமாக ஆகவே முடியாது.

அவர்களுடைய குடும்பம் பாதுகாப்புக்காகவும், அடிபட்டவர்களின் குடும்பம் வேலையில்லாத நேரத்தில் கரை சேர்வதற்கும் ஒரு முதலுதவியாக நினைக்க வேண்டும். இது சிகிச்சைக்காக என எடுத்துக் கொள்ளக் கூடாது. சிகிச்சை என்பது இனி நடக்கப் போகும் படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். அதற்கான இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அதற்கு முழுத்துறையும் பங்கு கொள்ள வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இது நம் கடமை. இந்தியாவில் எந்தவொரு துறையிலும் பாதுகாப்பு என்பது கிடையாது. சினிமா என்பது பிரபலமாக இருப்பதால் ஊடகத்தில் கவனம் பெறுகிறது".

இவ்வாறு கமல் பேசினார்.

தவறவிடாதீர்!

ஒருநொடிப் பொழுதுதான்; எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம்: 'இந்தியன் 2' விபத்து குறித்து ஸ்டைலிஸ்ட் பகிர்வு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x