

வேல்ராஜ் படத்தை இயக்கவில்லை என்று வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லை, அவர் தான் படத்தை இயக்கி வருகிறார் என்று தனுஷ் தெரிவித்தார்.
ஆறாவது முறையாக தொடர்ச்சியாக பிலிம்ஃபேர் விருது வென்றுள்ளார் தனுஷ். இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, “எல்லா நடிகர்களுக்கும் பிலிம்ஃபேர் விருதை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு இது 6-வது முறை கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
‘வி.ஐ.பி’ படக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிய புதிய படத்தின் வேலைகள் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். படத்தின் தலைப்பு ‘வேலையில்லா பட்டதாரி 2’ இல்லை. புதிய தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளோம்.
பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் முழு கதையையும் அவர் தயார் செய்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப உள்ளேன்’’ என்றார்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் வேல்ராஜ் இயக்குநராக பணிபுரியவில்லை என்று ஒரு தகவல் வெளியானதே என்று கேட்டதற்கு, “அதில் உண்மை இல்லை. அவர்தான் படத்தை இயக்கி வருகிறார்” என்றார் தனுஷ்.