

'மரிஜுவானா' இசை வெளியீட்டு விழாவில், வரிவிதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளைச் சாடிப் பேசினார் கே.ராஜன்.
எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியுள்ள படம் 'மரிஜுவானா'. 'அட்டு' படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் நடித்துள்ள இந்தப் படத்தில் ஆஷா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:
''சின்ன படங்கள் வெற்றி பெற்றால்தான், அதை வைத்து இன்னொரு படம் எடுப்பார்கள். அதன் மூலம் 1000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் நாயகன் ரிஷி ரித்விக், அர்னால்ட் மாதிரி இருக்கிறார். தமிழ்ப் படத்துக்கு ஒரு அர்னால்டு கிடைத்திருக்கிறார். அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும்போது தயாரிப்பாளர் செலவில் கேரவன் எல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது.
கேரளாவில் தயாரிப்பாளர் செலவில் காருக்கு டீசல், கேரவன் எல்லாம் மம்மூட்டி வைத்துக் கொள்வதில்லை. தனது சொந்தச் செலவில் தான் மம்மூட்டி கேரவன் வைத்துள்ளார். தமிழ்நாட்டு நடிகர்களும் அதேபோல் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறு படங்களுக்கு அரசு உதவி செய்கிறது.
அதேவேளையில், 8% வரியைப் போட்டு பாதிப்பையும் உண்டாக்குகிறார்கள். இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் லோக்கல் வரி கிடையாது. ஜிஎஸ்டி மட்டுமே உண்டு. அது தயாரிப்பாளருக்குப் பெரும் பாதிப்பு. தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
நாங்களே வட்டிக்குப் பணம் வாங்கி, அதைக் கட்ட முடியாமல் 1000 படங்கள் வரை வெளியாகாமல் உள்ளன. திரையுலகை நசுக்குவதற்காக மத்திய அரசு சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டியால் சினிமா தொழில் ரொம்பவே மோசமாகப் போய்விட்டது. இந்த வரி விஷயங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து விரைவில் ஒரு போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும். இது என் யோசனை.
மாநில அரசு நாம் சொன்னால் செய்யும். ஆனால், பிலிம் சேம்பரில் சொல்லி மத்திய அரசுக்கு எதிராக ஒரு போராட்டம் வரும் என்று சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்தில் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்த்து போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்த வேண்டும்''.
இவ்வாறு கே.ராஜன் பேசினார்.
தவறவிடாதீர்!