

விரைவில் நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து ரஜினியைச் சந்தித்து விஷால் மற்றும் சரத்குமார் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக சரத்குமார் மற்றும் விஷால் குழுவினர் இருதரப்புமே நாடக நடிகர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் அணிக்கு பாண்டவர் அணி என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த அணியினர் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் சந்தித்து தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்துரைத்து, கண்டிப்பாக வாக்களிக்க வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், புதன்கிழமை காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். அப்போது தனது தரப்பில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ரஜினியிடம் எடுத்துரைத்திருக்கிறார்.
ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பது தான் தற்போது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.