

'கபடதாரி' படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடித்துள்ளார்.
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’காவலுதாரி’ படம், தமிழில் 'கபடதாரி' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ், நந்திதா, நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், அவசரமாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதால் அவரால் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், அவருக்கு பதில் சுமன் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
'காவலுதாரி' கன்னடப் படத்தில் சுமன் ரங்கநாதன் தான் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்தில் தான் பூஜா குமார் நடிப்பதாக இருந்தது. தற்போது தனது கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். இவர் விஜயகாந்த் நடித்த 'மாநகர காவல்', அர்ஜுன் நடித்த 'மேட்டுபட்டி' மற்றும் அஜித் நடித்த 'ஆரம்பம்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் முழுமையாக படப்பிடிப்பை முடித்துவிட்டு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைப்பாளராகவும், ப்ரவீன் கே.எல். எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.