

கலைஞர் செய்திகள் சேனலில் மூத்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளினியாக வலம் வரும் சுமையா, இப்போது புதிதாக ‘மியூசிக் மேட்லி’ என்ற இசை நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
‘‘இசையை காதலிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஓர் இசைக் காதலிக்கு இசை சார்ந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும்! ‘மியூசிக் மேட்லி’ நிகழ்ச்சி மூலமாக எனக்கு அந்த சந்தோஷம் கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சி அரங்கம், இசையமைப்பாளர்கள், பாடகர்களின் ஸ்டுடியோ என நாலு சுவருக்குள்ளேயே படப்பிடிப்பை நடத்தாமல், இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள், வெளிப்புற படப்பிடிப்பு என சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி வித்தியாசமான பயணம். பாடகர்கள் பிரசன்னா, ஆலாப் ராஜு, முகேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பாடகர்களைத் தொடர்ந்து, பல இசையமைப்பாளர்களும் அடுத்தடுத்த வாரங்களில் இந்த நிகழ்ச்சிக்குள் வருகிறார்கள். அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, எனக்கு பிடித்த பாடல்களையும் பாடச்சொல்லி கேட்பேன். கொஞ்சம்கூட யோசிக்காமல், ‘இதோ...’ என பாடி அசத்துவார்கள். அப்பப்பா.. அந்த ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என்கிறார் சுமையா.