‘நார்கோஸ்’ பாதிப்பில் உருவானதே ‘மாஃபியா’ திரைப்படம்: கார்த்திக் நரேன் பேட்டி

‘நார்கோஸ்’ பாதிப்பில் உருவானதே ‘மாஃபியா’ திரைப்படம்: கார்த்திக் நரேன் பேட்டி
Updated on
1 min read

தனது ‘மாஃபியா’ திரைப்படம் நெட் ஃப்ளிக்ஸ் தொடரான ‘நார்கோஸின்’ பாதிப்பில் உருவானது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது இந்தப் படம். அதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்பது தெரியாமலேயே இருந்தது.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

கார்த்திக் நரேன் இரண்டாவதாக இயக்கிய ‘நரகாசூரன்’ படம், சில பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் கார்த்திக் நரேன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘மாஃபியா’ ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம். சென்னயை அடிப்படையாக கொண்ட கதைக்களம்தான். ஹீரோ ஆர்யன் ஒரு போதைப் பொருள் தடுப்பு அதிகாரி. இந்தக் கதாபாத்திரல் அருண் விஜய் நடிக்கிறார். ‘தி பீஸ்ட்’ (மிருகம்) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் வில்லனாக பிரசன்னா நடித்திருக்கிறார்.

கிரிஸ்டோபர் நோலன் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் படமாக்கல் முறையையே நானும் பின்பற்றுகிறேன். 'மாஃபியா' படத்தின் நெட் ஃப்ளிக்ஸ் தொடரான ‘நார்கோஸின்’ பாதிப்பில் உருவானது. இரண்டு கதைகளின் அடிநாதமும் ஒன்றுதான். ஆனால் அதைத் தாண்டி வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. 'மாஃபியா'வின் திரைக்கதை ‘நான் லீனியர்’ முறைப்படி எழுதப்பட்டுள்ளது.

படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஆனால், அவை படத்தின் திரைக்கதையோடு இணைந்தே வரும். பாடல்கள் திரைக்கதையோடு ஒன்றாமல் போகும்போது அவை படத்துக்கு வேகத்தடையாய் அமைந்து விடுகின்றன.

நான் குறும்படங்களின் மூலம் பெரிய திரைக்குள் வந்தவன். அதனால் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு எந்த இடம் கிடைத்தாலும், அதையே லொக்கேஷனாக மாற்றி விடுவேன். அதற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. 'மாஃபியா'வில், பல காட்சிகளை ‘கொரில்லா’ முறையில் படமாக்கியுள்ளோம். அதாவது ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது அது அங்குள்ள மக்களுக்கே தெரியாத வகையில் படமாக்குவது. படப்பிடிப்பு நடப்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அங்கே கூட்டமும் குறுக்கீடுகளும் உருவாகிவிடும்''.

இவ்வாறு கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in