

நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும், திருமணத்துக்காவது போக நேரம் இருக்கிறதா என்று யோகி பாபுவைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோகி பாபு பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
சமீபமாக எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும், திருமணம் எப்போது என்று யோகி பாபுவிடம் கேட்காமல் அவருடைய பேட்டி நிறைவு பெறாது. அவரும் "வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபுவுக்குத் திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த தகவலுக்கு யோகி பாபு தனது ட்விட்டர் தளத்தில் "என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.