Published : 04 Feb 2020 07:39 PM
Last Updated : 04 Feb 2020 07:39 PM

எல்லோருக்கும் பிடித்தவர் சிம்பு

தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திரக் கதாநாயகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் படை இருக்கிறது. ஆனால் எல்லா ரசிகர் படைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. சில நடிகர்களுக்கான ரசிகர் படைகள் எப்போதும் ஆக்டிவ் மோடிலேயே இருக்கும். வேறு சில நடிகர்களுக்கான ரசிகர் படைகள் படங்கள் வரும்போது மட்டும் தங்கள் நாயகனைக் கொண்டாடுவிட்டு மற்ற நேரத்தில் அமைதியாகிவிடும்.

சிம்புவின் ரசிகர்கள் முதல் வகைமையைச் சேர்ந்தவர்கள். சோழ மன்னர்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுக்கக்கூட தயங்காத வேளாட்படையைப் போன்றவர்கள் சிம்பு ரசிகர்கள். அவர்கள் இப்படி இருப்பதற்கான காரணத்தை “ஏன்” என்று கேட்டீர்கள் என்றால் ‘தளபதி’ படத்தில் ‘தேவா’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்வது போல் ‘சிம்பு’ என்று மட்டும் சொல்வார்கள். மறுபுறம் அண்மைக் கால நிகழ்வுகளால் சிம்புவைக் கிண்டலடிப்பவர்களும் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

உண்மையில் சிம்புவுக்காக உயிரை விடத் துடிக்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் சிம்புவைக் கொஞ்சம் பிடிக்கும். நடனம், தோற்றம், குழி விழும் புன்னகை. சண்டைபோடும் திறன், வயதில் மிகச் சிறியவராக இருந்தாலும் எவ்வளவு பெரிய வில்லனையும் எதிர்த்து நிற்கும் மாஸ் காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்தும் உடல்மொழி போன்ற திரையில் வெளிப்படும் திறன்களுக்காக அவரை ரசிப்பவர்கள் பலர்.

சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து மிக இளம் வயதில் சினிமாவின் அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஏற்பட்ட மரியாதை சிலருக்கு. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் நேர்மை. உலகம் என்ன நினைக்கும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதுக்கு பிடித்ததைச் செய்யும் துணிச்சல் போன்ற அவரது தனிப்பட்ட ஆளுமைக் குணங்களுக்காக அவரை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். இப்படியாக தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் பெரும்பாலானோருக்கு சிம்பு மீதான அன்பும் அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் சிம்பு மீது பல விமர்சனங்களும் இருக்கின்றன. அந்த விமர்சனங்கள் இந்தக் குறைகள் எல்லாம் இல்லாமல் இருந்தால் சிம்பு இன்று இருப்பதைவிட பல மடங்கு அதிக உயரத்தில் இருப்பாரே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு. பலருக்கு சிம்பு மீது இந்த ஆற்றாமை இருப்பது ஏன் என்று சிம்பு வளர்ந்த வந்த பாதையை கவனித்தவர்களுக்குத் தெரியும்.

அஷ்டாவதானியும் 1980களில் பல்துறை வித்தகராகத் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் டி.ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் மழலையாக இருந்தபோதே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர். பால்மணம் மாறாப் பாலகனாக ‘ஐயாம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்” பாடலில் அவர் ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்த குழந்தை நடனம். அதற்கு முன்பு குழந்தைகள் அந்த அளவு நடனத்துக்குப் பயன்படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் சிம்பு ஆடிய அளவு சிறப்பாக வேறெந்தக் குழந்தை நட்சத்திரமும் ஆடியதில்லை. அதற்குப் பிறகு டீன் ஏஜ் இளைஞனாக ‘மோனிஷா என் மோனலிசா’, ‘சொன்னால்தான் காதலா’, போன்ற படங்களில் ஒற்றைப் பாடலில் தோன்றி நடனம ஆடினார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றியடையவில்லை என்றாலும் நன்கு நடனம் ஆடத் தெரிந்த கதாநாயகர்களில் ஒருவராக சிம்பு அடையாளம் காணப்பட்டார். ‘வெச்சுப் பாரு வெரலு வரும்பாரு விசிலு’ பாடலில் அவரது துடிப்பும் வேகமும் நிறைந்த நடனம் கவனம் ஈர்த்தது. அடுத்து வெங்கடேஷ் இயக்கிய ‘தம்’ படத்தின் வெற்றியால் ஆக்‌ஷன் நாயகனாகத் தடம் பதித்தார். மறுபுறம் ஹரி இயக்கிய ‘கோவில்’ படத்தில் அமைதியும் அடக்கமும் நிறைந்த கிராமத்துக் காதலனாக அழகாக நடித்திருந்தார். முதல் மூன்று படங்களிலேயே இப்படி வேறுபாட்டைக் காட்டியவர்கள் மிகச் சிலரே.

அடுத்ததாக ‘குத்து’ படத்தின் வெற்றி மூலம் சிம்புவுக்கென்று ஒரு ரசிகர் படை உருவாகத் தொடங்கியிருந்தது. அதே வரிசையில் முன்னணி இயக்குநர்களுடன் அடுத்தடுத்த படங்களைச் செய்து அடுத்தகட்டப் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்க முடியும். பலரும் அதைத்தான் செய்வார்கள். ஆனால் சிம்பு அங்கே வேறுபட்டார். யாரும் ஊகித்திராத வகையில் தன் அடுத்த படத்துக்கு தானே கதை திரைக்கதை எழுதினார். அதுதான் ‘மன்மதன்’. அந்தப் படத்தை கிட்டத்தட்ட சிம்புவே இயக்கினார் என்றுகூட சொல்லலாம்.

2004 தீபாவளிக்கு அஜித்-சரண்-பரத்வாஜ் கூட்டணியின் ‘அட்டகாசம்’ படத்துடன் ‘மன்மதன்’ வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் அது ‘A’ சான்றிதழ் பெற்ற படம். ‘சிகப்பு ரோஜாக்கள்” பாணியிலான த்ரில்லர். 18 வயதைக் கடந்தவர்கள் மட்டுமே பார்த்து அந்தப் படத்தை வெற்றிபெறச் செய்தார்கள். அந்த அளவு கதை-திரைக்கதை ஆசிரியராக புது முத்திரை பதித்திருந்தார் சிம்பு. குறிப்பாக கிளைமேக்ஸ் திருப்பம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. ‘மன்மதன்’ படத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த திரையுலகமே சிம்புவைக் கவனிக்கத் தொடங்கியது. தமிழ் சினிமாவின் அடுத்த பெரும் சக்தியாக (force) அவர் பார்க்கப்பட்டார். இதெல்லாம் நடந்தபோது அவருக்கு 22 வயது. ! 20களில் இவ்வளவு சாதனைகளைச் செய்து மலைக்கவைத்தவர் 30களில் எந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டுமோ அந்த இடத்துக்கு வரவில்லையே என்பதுதான் அவர் மீது பலருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆம். அவர் பன்முகத் திறமையாளர்தான். அவர் அளவுக்கு வேகமாகவும் ஸ்டைலிஷாகவும் நடனமாடுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சிறந்த பாடகர். பாடல்களை எழுதுபவர். ‘ஒய் திஸ் கொலவெறிடி’ வந்த சமயத்தில் அவர் உருவாக்கி வெளியிட்டிருந்த ‘Love Anthem’ வெகு சிறப்பானது. ஏனோ அது பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதைப் போன்ற பல நல்ல தனி ஆல்பங்களை உருவாக்கும் திறமையும் அவருக்குண்டு. ‘சிங்கிள் டேக்’ ஆர்டிஸ்ட்’ என்று பல இயக்குநர்கள் அவரைப் புகழ்கிறார்கள். ‘தொட்டி ஜெயா’, ‘வானம்’ போன்ற வித்தியாசமான படங்களிலும் ரசிக்கத்தக்க வகையில் நடித்திருந்தார். அவரது திரைவாழ்வின் மிக முக்கியமான படமான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் அவ்வளவு அழகாக இருந்தார். சிறப்பாக நடித்தும் இருந்தார்.

எத்தனையோ தமிழ்ப் படங்களில் கதாநாயகனின் பெயர் கார்த்திக் என்று இருந்திருக்கிறது. ஆனால் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ கார்த்திக் அவற்றுள் தனிச் சிறப்பானது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை சிம்பு கையாண்டிருந்தார். மென்மையான படங்களில் அழகாகப் பொருந்துபவர் ‘சரவணா’, ‘சிலம்பாட்டம்’, ‘வாலு’ போன்ற மாஸ் படங்களிலும் பட்டையைக் கிளப்புவார். ஆனாலும் இவ்வளவு திறமைகள் இருப்பவர் இன்று அடைய வேண்டிய இடத்தை அடையாமல் இருக்கிறாரே என்ற ஏக்கமே பலரிடமிருந்து விமர்சனமாக வெளிப்படுகிறது.

‘அச்சம் என்பது மடமையடா’, ‘இது நம்ம ஆளு’ (அவரே தயாரித்த படம்), ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற படங்களில் தயாரிப்பாளர்கள்/இயக்குநர்கள் அவர் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை படக்குழுவுடன் ஒத்துழைப்பதில்லை என்று குற்றம் சாட்டியபோது பலருக்கு சிம்பு மீது நியாயமான கோபம் வந்தது. அந்தக் கோபத்தால் பலர் அவரை ஆதரிப்ப்பதைக் கைவிட்டனர். அவரை விமர்சிப்பவர்களும் சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பவர்களும் அதிகரித்ததற்குக் காரணமும் இதுவே. இவற்றுக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கிய ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்தபோதும் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தினார். effortless ஆக நடிப்பது எப்படி என்று பாடமெடுத்தார். பல இயக்குநர்கள் அவரைப் பற்றிப் புகழ்வது மெய்யானது என்று நிரூபித்தார். இதெல்லாம் அவர் மீதான ஏக்கத்தை அதிகரிக்கவே உதவின.

இப்போதும் ‘மாநாடு’ படத்துக்கு ஒழுங்காக ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு படம் மீண்டும் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி இதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. இந்தப் படம் பிரச்சினைகள் இல்லாமல் முடிந்து வெளியாகி வெற்றி பெற்றால் சிம்புவின் திரைவாழ்வில் மற்றொரு திருப்பமாக அது அமையும். அதற்குப் பிறகு அவர் ‘மன்மதன்’ காலகட்டத்தில் நிகழ்த்தத் தொடங்கிய சாதனைகளை மீண்டும் நிகழ்த்தி நட்சத்திரப் போட்டியில் மீண்டும் முன்னணிக்கு வருவார். தன்னை இப்போது கிண்டலடிப்பவர்களை மீண்டும் தன்வசம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவும் ஏதாவது ஒரு காரணத்துக்காக எல்லோருக்கும் பிடித்த சிம்பு எப்போதும் எல்லோருக்கும் பிடித்தவராகவே நீடிக்கவும் இந்தப் பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x