ஸ்ட்ரீமிங் தளத்தில் அடியெடுத்து வைக்கும் கமல்

ஸ்ட்ரீமிங் தளத்தில் அடியெடுத்து வைக்கும் கமல்
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசன் OTT என்று அழைக்கப்படும் ஸ்ட்ரீமிங் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

'ஹாஸ்டேஜஸ்’, 'ரோர் ஆஃப் தி லயன்’, 'நச் பலியே’ உள்ளிட்ட வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் பனிஜாய் ஏஷியா. இந்நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க உள்ளது. இவர்களுடன்தான் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். விரைவில் இந்தக் குழுவுடன் அவர் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய முயற்சி குறித்துப் பேசியுள்ள கமல்ஹாசன், "நிகழ்ச்சி உருவாக்கும் மற்றும் தயாரிப்பின் நாடி தெரிந்தவர்களுடன் இணைந்து கூட்டாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால் பனிஜாய் ஏஷியா நிறுவனத்தின் தீபக்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தத் துறையில் அவருக்கிருந்த விரிவான அறிவைக் கொண்டு பிராந்திய மொழியில் இந்தியாவில் பனிஜாய் ஏஷியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்குவதில் இருக்கும் சாத்தியங்கள் எங்களுக்குத் தெரிந்தன. இதை நிஜமாக்குவதில் அவரது துறையைப் பற்றிய புரிதல் உதவியிருக்கிறது. அவர்களுடன் இணைந்து பல்வேறு மொழிகளில், தளங்களில் புரட்சிகரமான விஷயங்களை உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டரில் இது பற்றிப் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், "எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in