‘அப்துல் காலிக்’ பெயர் காரணம் என்ன? - ‘மாநாடு’ ரகசியம் கூறும் சிம்பு

‘அப்துல் காலிக்’ பெயர் காரணம் என்ன? - ‘மாநாடு’ ரகசியம் கூறும் சிம்பு

Published on

‘மாநாடு’ படத்தில் தான் நடிக்கும் ‘அப்துல் காலிக்’ என்ற பெயருக்கான காரணத்தை நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த இந்தப் படம் இப்போது தான் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் வரிசையில் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன், கலை இயக்குநராக சேகர், எடிட்டராக ப்ரவீன் கே.எல், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சிம்புவின் பிறந்தநாளன்று ‘மாநாடு’ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட்பிரபு அறிவித்திருந்தார். அதன்படி சிம்புவின் பிறந்தநாளான நேற்று (03.02.2020) மாநாடு படத்தின் ‘அப்துல் காலிக்’ என்ற பெயரில் சிம்பு நடிக்கவுள்ளதாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு சிம்பு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“முதல்முறையாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முஸ்லிம்களை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை சிலர் வைத்தபோது அது எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய நண்பர்களில் முக்கால்வாசி பேர் முஸ்லிம்கள்தான். பெரியார் பாடலும் பாடுகிறேன், சபரிமலைக்கும் செல்கிறேன், முஸ்லிம் பெயரிலும் நடிக்கிறேன் என்று சிலருக்கு குழப்பம் ஏற்படக்கூடும். எல்லாரையும் போல என்னால் இருக்க முடியாது. வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதைவிட முதலில் மனிதனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

எனக்கு பெரியாரிடம் பிடித்த விஷயங்களையும் வெளியில் சொல்வேன், எனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் சபரிமலைக்கும் செல்வேன். மற்ற மதத்தை சேர்ந்து மக்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கும்போது அதற்கு குரல் கொடுப்பதற்காக முஸ்லிமாகவும் நடிப்பேன். அதற்கு இந்த படத்தில் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது இசையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.”

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in