

'ஓ மை கடவுளே' படத்தில் அசோக் செல்வனுடன் கடவுளாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓ மை கடவுளே'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கெளதம் மேனன் இருவருமே சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் மற்றும் தில்லி பாபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருப்பது, படத்தின் ட்ரெய்லர் மூலம் தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கேட்ட போது, "அனைவருமே திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால், இங்கு திருமண விவாகரத்து தான் அதிகம் நடக்கிறது. இது ஏன் என்று யோசித்த போது பிறந்த கதை தான் 'ஓ மை கடவுளே'
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப் போகிறவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பீல் பண்ணுவார்கள். நம் திருமண வாழ்க்கையில் இன்னொரு சாய்ஸ் கிடைத்தால் என்னவாகும் என்பதைக் கொஞ்சம் பேண்ட்சி பாணியில் சொல்லியிருக்கிறேன்.
படத்தில் ஒரே ஒரு காட்சியை மட்டும் நீக்கிவிட்டால் 'யு' சான்றிதழ் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அது முக்கியமான காட்சி என்பதால் நீக்கவில்லை. ஆகையால் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து