

கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்க, பிலோமின்ராஜ் எடிட் செய்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
விஜய்யின் ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான இந்தப் படம், 105 கோடி ரூபாயை வசூலித்தது. கார்த்தி நடிப்பில் முதன்முறையாக 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே இரவில் நடக்கும் திரைக்கதையாக அமைந்த இந்தப் படத்தை, ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில், ‘கைதி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே படத்தைத் தயாரிக்கிறது. இதன்மூலம் முதன்முறையாக இந்தியில் கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.