

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு 'அயலான்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
நீண்ட நாட்களாக பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிராபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் படத்துக்கு 'அயலான்' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தலைப்புக்குக் கீழே 'Destination Earth' என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு. பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வந்தார்கள்.
இந்தப் படத்தைத் தயாரித்து வந்த 24 ஏ.எம். நிறுவனத்துடன் இப்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கை கோத்துள்ளது. இதனால், இந்தப் படத்தின் பணிகள் இனிமேல் சிக்கலின்றி நடைபெறும் எனத் தெரிகிறது.
தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்தவுடன், அடுத்ததாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. அதில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் மட்டும் சுமார் 6 மாதங்கள் நடைபெறவுள்ளது.