

வி.சி.வடிவுடையான் இயக்கவுள்ள 'பாம்பாட்டம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை' மற்றும் 'பொட்டு' ஆகிய படங்களை இயக்கியவர் வி.சி.வடிவுடையான். இந்தப் படங்களைத் தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் 'வீரமாதேவி' படத்தை இயக்கி வந்தார். அதில் படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அதிலிருந்து விலகினார்.
அதற்குப் பிறகு வி.சி. வடிவுடையான் எழுதிய கதையில் நாயகனாக நடிக்க ஜீவன் ஒப்பந்தமானார். ஹாரர் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளிலும் தயாராகிறது. 'பாம்பாட்டம்' என்று இந்தப் படத்துக்குத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
பழனிவேல் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் ராணியாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். முழுக்கப் படத்தின் நாயகனுடனே பயணிப்பது போல் இந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கமல் நடித்த 'தசாவதாரம்' படத்துக்குப் பிறகு, தமிழில் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்துக்கு ஒரே ஒரு பாடலில் மட்டுமே நடனமாடியிருந்தார் மல்லிகா ஷெராவத்