

'தர்பார்' நஷ்டம் தொடர்பாக ரஜினியைச் சந்திக்க வந்த விநியோகஸ்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால், நாட்கள் போகப் போக படத்தின் வசூல் குறைந்து கொண்டே இருந்தது. இதனால், இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்குத் தோல்வியைத் தந்தது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 30-ம் தேதி ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்கள் சென்னை வந்தனர். அப்போது ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை என்றும், விரைவில் உங்களைச் சந்திப்பார் என்றும் விநியோகஸ்தர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது.
இதனால் ரஜினி தங்களைச் சந்திப்பார் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் காத்திருந்தனர். ஆனால், அது தொடர்பான எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில் இன்று (பிப்ரவரி 3) காலை ரஜினியின் வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு விநியோகஸ்தர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினரிடம், 'ரஜினி சார் எங்களைத் தடுத்து நிறுத்தச் சொன்னாரா?' என்று கேள்விகளை எழுப்பினர். ஆனாலும், ரஜினியின் வீட்டருகே செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்துக்கு தற்போது விநியோகஸ்தர்கள் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் 'தர்பார்' நஷ்ட ஈடு விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.