

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு 'தலைவி' என்ற படம் தயாராகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. இப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.
'தலைவி' படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கங்கணா ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''ஜெயலலிதாவாக நடிக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டேன். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் எனக்கு நல்ல நண்பராக இருப்பார். ஒரு கால்நடையைப் போல மேய்க்கப்படுவதை நான் விரும்பமாட்டேன். பெரும்பாலான நடிகர்கள் தங்களுடைய கர்வத்தை விட்டு வெளியே வரவேண்டும், ஆனால் நான் அப்படியானவள் அல்ல. இயக்குநர் இல்லாத நேரங்களிலும் கூட நான் தளத்தில் இருப்பேன். அதனால் நான் ஒரு முழுமையான ஈடுபாடு கொண்ட நபர் போல தெரிகிறேன்.
ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு வந்ததும் மிகவும் பயமாக இருந்தது. சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்ட போது, தான் முதல்வராகி மீண்டும் இங்கு வருவேன் என்று சபதம் ஏற்றார். அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் அதுதான் என நினைக்கிறேன். அதுவரை அவர் எம்ஜிஆரின் நிழலில்தான் இருந்து வந்தார், தன்னுடைய அபிலாஷகளை எப்போதும் அவர் வெளிப்படுத்தியதில்லை. ஆணாதிக்க உலகில் ஒரு பெண்ணாக இருந்த காரணத்தால் அவர் அவமானப்படுத்தப்பட்டது ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். யாராக இருந்தாலும் அந்த தருணத்தில் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். ஆனால் அவரோ அந்த சூழ்நிலையில் தன்னுடைய ஆளுமைத் திறனை வெளிப்படுத்தினார்.
நான் அவரைப் போல கிடையாது. அவர் ஒரு வித்தியாசமான நடிகை. பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராயைப் போல மிகவும் அழகான நடிகை அவர். அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு மிகப்பெரும் சவால். ஏனெனில் நான் ஒரு அழகான நடிகை கிடையாது.
ஆனால், எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக உணர்கிறேன். ஒரு நடிகையாக வேண்டும் என்று அவர் விரும்பியது கிடையாது. நானும் அப்படியே. நானும் ஒரு நடிகையாக விரும்பியதில்லை. இதனாலேயே நாங்கள் மிகவும் அபூர்வமானவர்களாக ஆகிறோம். தான் வெறும் ஒரு நடிகை மட்டுமில்லை என்பதை அவர் எப்போதும் உணர்ந்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். அதனாலேயே அவர் அரசியல் தலைவர் ஆனார். நானும் ஒரு நடிகையாக இருப்பது மட்டும் போதாது என்று உணர்ந்ததால் ஒரு இயக்குநராகவும் ஆனேன். எனவே எனக்கும் அவருக்கும் இது போல பல ஒற்றுமைகள் உண்டு.
மற்ற பெண்களைப் போலவே ஜெயலலிதாவும் ஒரு குடும்ப வாழ்க்கைக்காக, ஒரு குழந்தைக்காக ஏங்கினார். என்னுடைய வாழ்விலும் நானும் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கிய காலங்கள் உண்டு. சில திருமணமான நடிகர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார்கள். அவர்கள் யாரென்று நான் சொல்லப்போவதில்லை. இது போன்ற சில காட்சிகள் இந்தப் படத்திலும் உண்டு. பொது இடங்களில் பல அவமானங்களை அவர் சந்தித்தார். பல இளம் நடிகைகளுக்கு இதுதான் நடக்கிறது. ஆனால், யாரும் பகிர்ந்து கொள்வதில்லை.
ஜெயலலிதா முதல் முறை முதல்வராவதுடன் இப்படத்தின் கதை முடியும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். அவருக்கு அப்போது 40 வயது. எனக்கு தற்போது 32. இதுவும் ஒரு ஒற்றுமைதான். ஆனால் நான் எடையை அதிகரித்துள்ளேன். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இது உற்சாகமான ஒன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.
பாலிவுட்டில் நான் நடிப்பதைப் போன்ற கதைகள் அமைந்தால் தமிழிலும் நடிப்பேன். ஆனால் ஹீரோக்களுக்கு பக்க வாத்தியமாக நடிக்க நான் விரும்பவில்லை. மும்பையில், தென்னிந்தியாவிலும் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மிகப்பெரிய கான்களாகவும், கபூர்களாகவும் இருந்தாலும் கூட நான் அவர்களோடு நடிக்கமாட்டேன். மீண்டும் இன்னொரு தமிழ்ப் படத்தில் நான் நடிக்கவேண்டும் என்றால் நல்ல கதாபாத்திரமாக அது இருக்கவேண்டும்''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
கங்கணா, ஜெயம் ரவியுடன் இணைந்து தமிழில் நடித்த ‘தாம் தூம்’ படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.