ராமாயணம் குறித்த மிஷ்கின் பேச்சு: ஹெச்.ராஜா எதிர்ப்பு

ராமாயணம் குறித்த மிஷ்கின் பேச்சு: ஹெச்.ராஜா எதிர்ப்பு
Updated on
1 min read

'வால்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராமாயணம் குறித்த மிஷ்கினின் பேச்சுக்கு, ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம் புலி, ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைக்கோ'. இந்தப் படம் வசூல் ரீதியில் வரவேற்பைப் பெற்றாலும், விமர்சகர்கள் பலரும் படத்தில் லாஜிக்கே இல்லை என்று தெரிவித்தனர்.

இதனிடையே 'வால்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, '' 'சைக்கோ' படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் சாப்பாடு போட்டார் என்று அவருக்கு ஆதரவாகச் சண்டை போடுகிறார்கள். அதில் எந்தவொரு லாஜிக்குமே இல்லை.

நாளை ராமனிடம் செத்துப் போகப் போகிறேன். ஆனால் இத்தனை நாள் வளர்த்த என் அண்ணனுடன் வாழ்ந்து செத்துப் போவேன் என்று சொன்னதில் லாஜிக் இல்லை. போரில் ராவணனிடம் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீர்ந்து போகின்றன. அப்போது ராவணன் 'இன்று போய் நாளை வா' என்று சொல்கிறான். அதிலும் லாஜிக் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மிஷ்கினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "ராமாயணத்தை இழிவாகப் பேசிய 'சைக்கோ' சினிமா இயக்குநர் மிஷ்கினின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தின் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சரியான எதிர்வினையாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in