

சா வெறியை எதிர்த்து, காதலர்களைச் சேர்த்து வைக்கும் கம்யூனிஸப் போராட்டமே ‘நாடோடிகள் 2’.
கம்யூனிஸ்ட்டான சசிகுமார், மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களையும் தட்டிக் கேட்கிறார்; அநியாயத்தை எதிர்த்துப் போராடுகிறார். டாக்டரான அஞ்சலி, பரணி, சசிகுமார் தந்தையின் நண்பர் உள்ளிட்ட பிற சாதிகளைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றனர்.
சாதிக்கு எதிரான மக்களை ஒன்றுதிரட்டி, ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறது சசிகுமார் அண்ட் டீம். இது சசிகுமார் சாதியைச் சேர்ந்த தலைவருக்கு கோபத்தை உண்டாக்குகிறது. எனவே, சசிகுமாரை அழைத்து அவர் எச்சரிக்கிறார். ஆனால், ‘சாதியை ஒழித்தே தீருவேன்’ என அவரிடமும் சவால் விடுகிறார் சசிகுமார்.
இவர் இப்படியே திரிவதால், தாய்மாமா உட்பட சசிகுமாருக்கு யாருமே பெண் தர மறுக்கின்றனர். இதனால், யாராவது பெண் கொடுத்தாலே போதும் என்ற மனநிலைக்கு ஆளாகிறார் சசிகுமார். அப்போது, சசிகுமார் சாதியைச் சேர்ந்த அதுல்யா ரவியைத் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
திருமணம் முடிந்து முதலிரவுக்குச் செல்லும் சசிகுமாருக்கு, பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? அதைத் தொடர்ந்து சசிகுமார் என்னென்ன செய்தார்? சவால் விட்டபடி சாதியை ஒழித்தாரா சசிகுமார்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது திரைக்கதை.
காதலர்களைச் சேர்த்து வைப்பது, அவர்கள் வீட்டிற்குத் தெரிந்து பிரச்சினை ஆனதும் காதலர்களைக் காப்பாற்றுவது என ‘நாடோடிகள்’ படத்தின் டெம்ப்ளேட்தான் இந்தப் படமும். ஆனால், கருத்தியல் ரீதியாக மிக வலுவான திரைக்கதையுடன் அமைந்திருப்பது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
கதையை யோசிக்க பெரிதாக மெனக்கிடாமல், சங்கர் - கவுசல்யா காதல் மற்றும் கொலை, திருநங்கை ப்ரித்திகா யாஷினி சப்-இன்ஸ்பெக்டரானது, ட்ராஃபிக் போலீஸ் ஹெல்மெட் போடாமல் நோ என்ட்ரியில் செல்போன் பேசியபடி பைக் ஓட்டிச் செல்வது என கடந்த சில வருடங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்களையே கதையாக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், அவற்றைச் சரியாகப் பொருத்தி திரைக்கதையாக மாற்றிய விதம் அருமை.
ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் ‘கருத்து’ சசிகுமார் கச்சிதமாகப் பொருந்துகிறார். சசிகுமார் - சமுத்திரக்கனி கூட்டணி என்றவுடன், முன்கூட்டியே மனதைத் தயார் செய்துகொண்டு போனதால், சசிகுமார் பேசும் கருத்து வசனங்களை ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது.
செங்கொடி கதாபாத்திரத்தில் பல நாட்களுக்குப் பிறகு தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ளார் அஞ்சலி. படத்திலேயே அவருடைய கதாபாத்திரத்தன்மை, ஆகச் சிறந்த வடிவமைப்பு. ‘அடி வாங்குங்க’, ‘மனசுக்குப் பிடிக்காத பொண்ணோட படுக்குறது, பொணத்தோட படுக்குறதுக்குச் சமம்’, ‘ஏற்கெனவே ஒருமுறை தோணுச்சு’ என எல்லா விதங்களிலும் சூழ்நிலையிலும் அஞ்சலியின் கதாபாத்திரம் அற்புதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தோழர் கதாபாத்திரமாக இருந்தாலும், காமெடி செய்ய முயற்சிக்கும் பரணி; உறவினர்களின் நாடகப் பாசத்தில் சிக்கிக் கொள்ளும் அதுல்யா ரவி; அவரின் காதலராக வரும் இசக்கி பரத்; துளசி என எல்லா நடிகர்களும் அவரவர்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி நடித்துள்ளனர். அதுவும், அதுல்யாவின் அத்தையாக நடித்திருப்பவர் சாதி வெறி பிடித்த பெண்களைக் கண்முன் நிறுத்துகிறார்.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளன. யுகபாரதி வரிகளில் ‘அதுவா அதுவா’ பாடல் ரசிக்க வைத்தாலும், அது படத்தில் இடம் பெற்ற இடம், திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. அதேபோல், சசிகுமார் - அஞ்சலி காதல் காட்சியும் படத்துக்கான வேகத்தடை. பின்னணி இசையில் ஒருசில இடங்களில் சொதப்பினாலும், நிறைய இடங்களில் திரைக்கதைக்கான விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார் ஜஸ்டின்.
‘நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலை, இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக, இரண்டு பைக்கில் வரும் நான்கு வில்லன்களுக்காக இரண்டு பஸ்ஸை வைத்துக்கொண்டு அவர்கள் காட்டும் அலப்பறை, சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
சாதி வெறி பிடித்தவர்களாகக் காட்டப்படும் அனைவரும், மூச்சுக்கு முன்னூறு முறை ‘ஜாதி’, ‘ஜாதி’ என கூவிக்கொண்டே இருப்பது, எரிச்சலை வரவழைக்கிறது. ஒரு விஷயத்தைக் காட்சியாகப் பார்வையாளனுக்கு கடத்தாமல், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வசனங்களாகவே தொண்டைத் தண்ணீர் வற்ற பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள் சமுத்திரக்கனியும் சசிகுமாரும் எனத் தெரியவில்லை.
அதேபோல், ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி விரிவாகப் பேசாமல், நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் நுனிப்புல் மேய்வது போல் தொட்டுச் செல்வதும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வசனங்களைக் குறைத்து, காட்சிகள் மூலம் விஷயத்தைக் கூறியிருந்தால் இந்தப் படம் வெகுவாகக் கொண்டாடப்பட்டிருக்கும்.