

தான் அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் ஆதியின் செயலால் கடும் அதிருப்தியில் சுந்தர்.சி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் பல்வேறு ஆல்பங்களில் பணிபுரிந்து வந்த ஹிப் ஹாப் ஆதியை, தான் இயக்கிய 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் சுந்தர்.சி. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை 2', 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய படங்களுக்கும் ஹிப் ஹாப் ஆதிதான் இசை.
இசையமைப்பாளர் மட்டுமன்றி அவரைத் தனது தயாரிப்பில் 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார் சுந்தர்.சி. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி தயாரித்த 'நட்பே துணை' மற்றும் 'நான் சிரித்தால்' படங்களிலும் ஹிப் ஹாப் ஆதிதான் ஹீரோ. ஹிப் ஹாப் ஆதியின் முன்னேற்றத்துக்கு பல்வேறு வகைகளில் காரணமாக இருந்தவர் சுந்தர்.சி.
இந்நிலையில், சமீபமாக ஹிப் ஹாப் ஆதியின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் சுந்தர்.சி. மேலும், தனது தயாரிப்பில் வெளியாகவுள்ள 'நான் சிரித்தால்' படத்தின் படப்பிடிப்பிலும் சரியாகக் கலந்து கொள்ளாததால் படத்தின் பட்ஜெட் அதிகமாகியுள்ளதாம். இதனால், இனிமேல் ஹிப் ஹாப் ஆதிக்கு எந்தவொரு வகையிலும் வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்று சுந்தர்.சி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனது இயக்கத்தில் உருவாகவுள்ள 'அரண்மனை 3' படத்துக்கு சத்யாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.சி. ஹிப் ஹாப் ஆதி மீது தனது குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதைக் காட்டும் வகையில், அவர் தொடர்பான அதிருப்தி செய்தி ஒன்றை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14-ம் தேதி 'நான் சிரித்தால்' படம் வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுமா, அதில் ஹிப் ஹாப் ஆதி - சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.