

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க வித்யா பாலனுக்கு தேதிகள் இல்லாததால், அந்தக் பாத்திரத்தில் நடிக்க வேறு ஒருவரைத் தேடி வருகிறார்கள்.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலம் நடைபெற இருப்பதால் அதற்கு முன்பாக ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டார் தனுஷ்.
துரை.செந்தில்குமார் கூறிய கதை பிடித்துவிடவே, அப்படத்தில் நடித்து தயாரிப்பது என்று முடிவெடுத்தார் தனுஷ். முதல் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் தோன்ற இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் மட்டும் தயாரிக்க இருந்த இப்படத்தை வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் வரும் எதிர்மறை பெண் வேடத்துக்கு வித்யா பாலன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அணுகினார்கள். ஆனால், அவரோ நடிக்க விருப்பம்தான். ஆனால், உடனே என்னிடம் தேதிகள் இல்லை, ஜனவரி என்றால் தருகிறேன் என்று கூறிவிட்டார்.
ஆனால், படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்க இருப்பதால் தற்போது வித்யா பாலனுக்கு நிகராக வேறு ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு தீர்மானித்திருக்கிறது.