

'சைக்கோ' படத்தில் லாஜிக் இல்லை என விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் மிஷ்கின் பதிலடிக் கொடுத்துள்ளார்.
ஸ்ருதி திலக் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வால்டர்'. சிபிராஜ், நட்ராஜ், சமுத்திரக்கனி, ஷெரின், சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் பி.வாசு, மிஷ்கின் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சைக்கோ' படத்துக்கு விமர்சன ரீதியாக கலவையாக உள்ளது. ஆனால், வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உள்ள லாஜிக் குறைகளைப் பலரும் தங்களுடைய விமர்சனத்தில் மேற்கோள்காட்டியுள்ளனர்.
இதற்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் 'வால்டர்' இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசினார். தனது பேச்சில் மிஷ்கின் "அன்பு எனும் பெயர் வைத்துள்ள இயக்குநருக்கு நன்றி. சமூகத்தின் லாஜிக் பிரச்சனைகளில் சிக்கியிருந்தேன். அன்பின் அழைப்பால் திலகவதி மேடம் அழைத்ததால் இங்கு வந்தேன். நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் நட்டி இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இன்று மிகச்சிறந்த நடிகராக மாறி நிற்கிறார் வாழ்த்துகள்.
சத்யராஜ் ஒரு மிகச்சிறந்த நடிகர். வெற்றி பெற்ற பின் சமூகத்திற்காகப் பேசுபவர். அவரது மகன் சிபிராஜ் தன்னை தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். நான் விரைவில் அவருக்குப் படம் செய்வேன். வால்டர் எனும் பெயரே பலம் வாய்ந்தது. நிறையக் கதைகள் அந்தப் பெயர் பின்னால் இருக்கிறது.
லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் சாப்பாடுப் போட்டார் என்று அவருக்கு ஆதரவாகச் சண்டை போடுகிறார்கள். அதில் எந்தவொரு லாஜிக்குமே இல்லை.
நாளை ராமனிடம் செத்துப் போகப் போகிறேன். ஆனால் இத்தனை நாள் வளர்த்த என் அண்ணனுடன் வாழ்ந்து செத்துப் போவேன் என்று சொன்னதில் லாஜிக் இல்லை. போரில் ராவணனிடம் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீர்ந்து போகிறது. அப்போது ராவணன் 'இன்று போய் நாளை வா' என்று சொல்கிறான். அதிலும் லாஜிக் இல்லை" என்று பேசினார் மிஷ்கின்.