

எம்.ஜி.ஆரிடம் கிடைத்த பாராட்டு குறித்த சம்பவத்தை, 'வால்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நினைவுப் பேசினார் வால்டர் தேவாரம்
ஸ்ருதி திலக் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வால்டர்'. சிபிராஜ், நட்ராஜ், சமுத்திரக்கனி, ஷெரின், சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் வால்டர் தேவராம் பேசியதாவது:
இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. கடந்த 4 மாதமாக மருத்துவமனையில் இருந்ததால், நடப்பது எல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. எனக்கு சினிமாவைப் பற்றி அவ்வளாக தெரியாது. மூணாறு என்ற ஊரில் தான் பிறந்து வளர்ந்தேன். பள்ளிக்கு 8 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு 16 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அப்படி நடந்து தான் பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி படிப்புக்குத் தான் சென்னைக்கு வந்தேன்.
ஊட்டியில் இரண்டு ஆண்டுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தேன். அங்குப் படப்பிடிப்புக்கு வரும் போது தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அனைவரையும் பார்த்துள்ளேன். பின்பு வெவ்வேறு பதவிகளில் இருந்தேன். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது காவல்துறை அதிகாரியாக இருந்தேன். அப்போது திமுகவினர் இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். நாங்கள் கொடுத்த இடத்தில் நிற்கவில்லை. அதில் கலாட்டாவாகி விட்டது.
இந்திரா காந்தியால் மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் கூட்டத்துக்குப் போக முடியவில்லை. அங்கெல்லாம் அவருக்குப் பொதுக்கூட்டம் இருந்தது. அப்போது நடந்த கலாட்டாவில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்து போனார்கள். அன்று மாலை மூன்று இடத்தில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தைச் சென்னை மெரினாவில் நடத்தினோம். அதில் இந்திரா காந்தி ரொம்பவே சந்தோஷம். எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டினார். கூட்டம் நடத்தியதில் மகிழ்ச்சி. இல்லையென்றால் மாவட்டத்துக்கே கெட்டப் பெயராகி இருக்கும் என்றார். இதே மாதிரி பல சம்பவங்கள் நடந்துள்ளது.
பின்பு நக்சலைட் ஆபரேஷன், வீரப்பன் ஆபரேஷன் எனப் பலவற்றில் பணிபுரிந்ததில் பல விருதுகள் எல்லாம் கிடைத்தது. காவல்துறையில் 30 ஆண்டுகள் முடிந்து, ரிட்டையாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களிடமும் பணிபுரிந்துள்ளேன். சிவாஜிக்குப் பிறகு சினிமாவில் ரொம்ப தெரிந்தவர் சத்யராஜ். குன்னூரில் உள்ள அவர் வீட்டுக்கு வரும் போது சந்திப்பேன். அங்கு சிபிராஜை சின்ன வயதில் பார்த்துள்ளேன். பின்பு, இந்த நிகழ்ச்சியில் ரொம்ப தெரிந்தவர் இயக்குநர் பி.வாசு.
'வால்டர் வெற்றிவேல்' படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் வந்து பேசினார். உங்களுடைய பெயரை உபயோகிப்பதற்கு பெர்மிஷன் வேண்டும் என்றார். என் பெயர் 'வால்டர் தேவாரம்', நீங்கள் 'வால்டர் வெற்றிவேல்' என்று தானே எடுக்கிறீர்கள். பின்பு ஏன் பெர்மிஷன் என்று சொன்னேன். இந்த விழாவுக்கு என்னை அழைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
இவ்வாறு வால்டர் தேவாரம் பேசினார்.