

'வால்டர் வெற்றிவேல்' மற்றும் 'வால்டர்' ஆகிய படங்களுக்குள்ள ஒற்றுமை என்னவென்று இசை வெளியீட்டு விழாவில் சிபிராஜ் பேசினார்.
ஸ்ருதி திலக் தயாரிப்பில் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வால்டர்'. சிபிராஜ், நட்ராஜ், சமுத்திரக்கனி, ஷெரின், சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம், தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் சிபிராஜ் பேசியதாவது:
அப்பா நடித்த படங்களிலேயே ’வால்டர் வெற்றிவேல்’ மிகப்பெரிய வெற்றிப் படம். அந்த தலைப்பிலிருந்து ஒரு பகுதியைத் தலைப்பாக வந்துள்ளோம். ஒரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தாலே, அப்பா அந்தப் படத்தில் என்று ஒப்பிடுவார்கள். 'வால்டர்' என்ற தலைப்பு வைக்கும் போது ஒரு பயமிருந்தது. ஏன் தைரியமாக வைத்தோம் என்றால் அந்தளவுக்கு இந்தப் படத்தின் கதை அமைந்தது என்று சொல்வேன்.
'வால்டர் வெற்றிவேல்' படத்தின் இயக்குநர் பி.வாசு சார் மற்றும் அதன் கதைக்கு உதவியாக இருந்த வால்டர் தேவராம் சார் இருவரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததுக்கு நன்றி. அப்பாவால் இன்று வரமுடியாத சூழல், ஆனால், பி.வாசு வந்தது நடத்திக் கொடுத்ததில் மகிழ்ச்சி.
இயக்குநர் அன்பு என்னிடம் இந்தக் கதையை 2015-ல் சொன்னார். நான் ஒ.கே சொன்னவுடன், தயாரிப்பாளரோடு வருகிறேன் என்று சென்றார். ஆனால், நிறைய நாயகிகள் தான் அன்பு என்பவர் உங்களிடம் கதை சொன்னாரா என்று கேட்பார்கள். ரொம்ப பேசுகிறாரே சரியாக இயக்குவாரா என்று சந்தேகம் வரலாம். ஆனால், அவருடைய பணியில் ரொம்ப சரியாக இருப்பார்.
'வால்டர் வெற்றிவேல்' மற்றும் 'வால்டர்' படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 'வால்டர் வெற்றிவேல்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததுக்குக் காரணம் குழந்தை சென்டிமெண்ட். அதே போல் இந்த 'வால்டர்' படத்திலும் அதைவிட ஒரு படி மேலேயே குழந்தை சென்டிமெண்ட் இருக்கிறது.
'சதுரங்க வேட்டை' படத்தின் ப்ரிவ்யூ ஷோவில், இயக்குநர் வினோத் "உங்களைக் கூட மனதில் வைத்திருந்தேன் சிபி. ஆனால், கதைச் சொல்ல உங்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை" என்றார். அந்தப் படம் நீங்கள் பண்ணியதால் மட்டுமே அவ்வளவு பெரிய வெற்றியடைந்தது. உங்களைத் தவிர வேறு யாராலும் அந்த மாதிரி நடித்திருக்க முடியாது.
இவ்வாறு சிபிராஜ் பேசினார்.