

மஹா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘மகராசி’ தொடரில் பாரதி என்ற கதாபாத்திரம் ஏற்று சீரியல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார் திவ்யா. ‘சுறா’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இத்தொடரின் அனுபவங்கள் குறித்து திவ்யா உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். அதில் இருந்து..
ஓடும் ரயில், பிரமிக்க வைக்கும் அரங்குகள், பங்களா என பிரம்மாண்டமாக இருக்கிறதே ‘மகராசி’ தொடர்?
தனி வீடு, உறவுகள் கூடிக் கொண்டாடாத வாழ்க்கை முறை ஆகியவை பரவலாகிவரும் காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம், அதன் கலகலப்பு, பாசம், காதல், அக்கறை என நகரும் தொடர் இது. தொடரின் ஆரம்பத்திலேயே ஹரித்வார், ஹைதராபாத் என வெளி மாநிலங்களுக்கு பயணித்து இப்போது பிரம்மாண்டமான வீட்டுக்குள் வந்திருக்கிறோம். எனக்கு ரொம்ப அன்பான கதாபாத்திரம். ஒவ்வொரு நாள் நடிப்பும் அவ்ளோ எனர்ஜியாக இருக்கிறது.
சிவாஜி மனோ, அஸ்வினி என அனுபவம் உள்ள நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் எப்படி?
‘கேளடி கண்மணி’ தொடருக்கு அடுத்தபடியாக அமைந்த 2-வது தொடர் இது. ஆரம்பத்தில் பயமாக இருந்தது. எல்லோரையும் சினிமாவில் பார்த்து வியந்திருக்கிறோம். சீனியர் நடிகர்களுக்கு முன்பு நான் ஒன்றுமே இல்லை. ஆனால், கொஞ்சம்கூட ஈகோ இல்லாமல் பழகுகின்றனர். எல்லோரும் என்னை அன்பாக கவனித்துக்கொள்கின்றனர். நல்லா பழகியதால் தினமும் கலகலப்பாக நகர்கிறது. சீரியலுக்காக இல்லாமல் அத்தை, மாமா என்று நிஜ உணர்வுடனே பழகத் தொடங்கிவிட்டோம்.
பெங்களூரு பெண்ணான உங்களுக்கு அங்கும் சீரியல் வாய்ப்புகள் குவியுமே?
ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் எனக்கு சரியாக இருக்கும். இப்போ என்னை ‘மகராசி’ பாரதியாக கொண்டாடுகின்றனர். இன்னும் இரண்டு, மூன்று சீரியல்கள் என இறங்கினால் ரசிகர்கள் குழம்புவார்கள். தயாரிப்பு தரப்பிடம் இருந்து ‘மகராசி’ கன்னட தொடருக்குக்கூட வாய்ப்பு வந்தது. நான், ‘‘இப்போதைக்கு இது ஒன்று போதுமே’’ என்று கூறி புரியவைத்தேன்.
இப்பவும் பெங்களூருவாசிதானா?
ஆமாம். அம்மா, அப்பா, கணவர், குழந்தைன்னு அழகான வாழ்க்கை. மாதத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு. மற்ற 15 நாட்கள் குடும்பம். அந்த 15 நாளும் சுகமானதாக நகர்கிறது. அதனால், குடும்பத்திலும் நான் பாசக்கார ‘மகராசி’தான்.
அந்த நேரத்தில், முழுக்க இல்லத்தரசி வாழ்க்கைதானா?
வீட்டில் இருக்கும்போது என்னையும், குழந்தையையும் அம்மா பார்த்துப்பாங்க. அதுக்காக சமையல்கட்டு பக்கம் போகவே மாட்டேன் என்று இல்லை. அப்பப்போ.. சில சுவையான டிஷ் செய்வேன்.
காமெடி டிராக் எழுதிய ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் தொடர் இது. அவரோடு பணிபுரிவது எப்படி உள்ளது?
‘சுறா’ படத்தை இயக்கியவர் என்று கேள்விப்பட்டதுமே, மிகுந்த நம்பிக்கை பிறந்தது. அதேபோல, ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கும் சினிமா மாதிரிதான் இருக்கும். சின்ன காட்சியாக இருந்தாலும், அர்த்தம் உள்ளதாக இருக்கும். அதுதான் இத்தொடரின் சிறப்பம்சம்.
உங்களுக்கு சினிமா அழைப்புகள் வந்திருக்குமே?
இந்த வாழ்க்கையே நிம்மதியாக இருக்கிறது. அதை தேவையின்றி கெடுத்துக்கொள்ள வேண்டுமே!
சீரியல் நடிகைகள் பலர் டிவி பார்க்கவே நேரம் இல்லை என்கிறார்களே?
நான் நிறைய தொடர்கள் பார்ப்பேன். ஒவ்வொரு தொடரின் கதையும் எப்படி நகர்கிறது.. மேக்கப், காஸ்ட்யூம் என நிறைய கற்றுக் கொள்ளகலாம். எல்லா நடிகைகளுக்கும் இது முக்கியம்!