

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'மான் கராத்தே' இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கெத்து' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஏமி ஜாக்சன், சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து 'என்றென்றும் புன்னகை' அஹ்மத் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் உதயநிதி. நாயகியாக ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக், இசை சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு மதி என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அக்ஷரா கெளடா ஒப்பந்தமாகி இருக்கிறார் , ஆஷா ஜாவேரி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இப்படத்தில் வரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'காக்கா முட்டை' படத்தின் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றவர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக்கான இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.