

டிக்கெட் கட்டணம் தொடர்பாக நாயகர்களுக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கமல் கோவின்ராஜ் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘புறநகர்’. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இந்திரஜித் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 29) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தருண் கோபி, கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது:
''தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமாக நடனம் ஆடியுள்ளார். நமக்கு எப்போதுமே நடனம் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால், மின்னல் முருகன் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால், டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால், இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார். அவருக்குத் தனிப்பட்ட பாராட்டுகள்.
நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில் ஒருகாலத்தில் தனி கிளாஸ் வைத்து டீ கொடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. 'ஒரு கை ஓசை' படத்தில் இந்த விஷயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்த அளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது.
இந்தக்காலத்தில் படம் எடுக்கிறதும் அதைச் சரியா கொண்டு வருவதும் பெரிய விஷயம். இந்த டீம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல உதவியாக இருக்கிறார்கள். மக்களுக்குக் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும் உண்டு. ஏன் என்றால் மக்களிடம் இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படம் டீம் எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்''.
இவ்வாரு கே.பாக்யராஜ் பேசினார்.