

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கெளரி கிஷன் நடித்து வருகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
தனுஷ் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்தில் கெளரி கிஷனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் கெளரி கிஷன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் தவிர்த்து விஜய்யுடன் 'மாஸ்டர்' மற்றும் '96' தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' ஆகிய படங்களிலும் கெளரி கிஷன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.