

அதிக வசூல் மற்றும் அதிகபட்ச ட்ரெண்ட் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு 'பிகில்' தயாரிப்பாளர் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்தனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி 'பிகில்' வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்று, அனைத்து வசூல் சாதனைகளையும் உடைத்தது.
தற்போது 'பிகில்' வெளியாகி 100 நாட்களைக் கடந்துள்ளது. இது தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு. அதனைப் பகிர்ந்த தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பதிவில், "இந்த வாரம் 'பிகில்' 100 நாட்கள் ஓட்டத்தை நிறைவு செய்யும். உலகம் முழுவதும் இருக்கும் தளபதி ரசிகர்களின் ஆதரவின்றி இது சாத்தியப்பட்டிருக்காது. வருடத்தின் அதிக வசூல் செய்த, அதிகபட்சம் ட்ரெண்ட் ஆன, சாதனை படைத்த தமிழ் சினிமாவாக இதை மாற்றியதற்கு எங்கள் அனைவரின் நன்றி" என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.