

திரையுலகில் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிவேனா என்ற கேள்விக்கு இயக்குநர் பாரதிராஜா பதிலளித்துள்ளார்.
திரையுலகில் அறிமுகமாகும் முன்பே பாரதிராஜா - இளையராஜா இருவருமே நெருங்கிய நண்பர்கள். பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. அதில் தொடங்கி, ’சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ’கிழக்கே போகும் ரயில்’ (1978), ’புதிய வார்ப்புகள்’ (1979), ’நிறம் மாறாத பூக்கள்’ (1979), ’கல்லுக்குள் ஈரம்’ (1980), ’நிழல்கள்’(1980), ’டிக் டிக் டிக்’ (1981), ’அலைகள் ஓய்வதில்லை’ (1981) என அனைத்து பாரதிராஜா படங்களுக்குமே இளையராஜா தான் இசை.
அதற்குப் பின்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இருவருமே பிரிந்தனர். எந்தவொரு நிகழ்ச்சியிலுமே இருவரும் ஒன்றாகக் கலந்து கொள்ளாமலேயே இருந்தனர். கடந்த ஆண்டு தேனியில் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் சந்தித்து, தங்களுடைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பிரசாத் லேப் - இளையராஜா பிரச்சினையில், இளையராஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் பாரதிராஜா.
இதிலிருந்தே இருவரும் இணைந்து பணிபுரிவார்கள் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தனது 'மீண்டும் ஒரு மரியாதை' படத்தை விளம்பரப்படுத்த, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது 'மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிவீர்களா' என்ற கேள்விக்கு பாரதிராஜா, "இளையராஜாவுடன் சில ஆண்டுகளாக ஊடலில் இருந்தேன். பின்பு இரண்டு பேருமே கோபித்துக் கொண்டு சென்றோம். பேசவே இல்லை. சமீபத்தில் தேனியில் ஒரு விழாவில்தான் இருவரும் சந்தித்துப் பேசினோம். இப்போது இணைந்துவிட்டோம்.
சினிமாவில் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்கலாம். ஒரு குடும்பம் என்று இருந்தால் அண்ணன், தம்பிகளுக்குள் சண்டை, சச்சரவுகள் வந்துதான் தீரும். பின்னர் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பார்க்கும்போது பேசிவிடுவோம். அது பாசம். அது போலத்தான், நாங்கள் சினிமாவில் மீண்டும் இணைந்து பணிபுரிவோமா என்பதைக் காலமும், கடவுளும்தான் முடிவு செய்ய முடியும். நாளை நடக்கவுள்ளதை நம்மால் கணிக்க முடியாது அல்லவா" என்று பதிலளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.