

தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் சாதிய ரீதியிலான படங்கள் குறித்து தருண் கோபி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கமல் கோவின்ராஜ் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘புறநகர்’. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இந்திரஜித் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 29) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தருண் கோபி, கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தருண் கோபி பேசியதாவது:
"சிறு படம் என்று அனைவரும் சொல்கிறார்கள். சிறு படம், பெரிய படம் எது என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல படமாக இருந்தால் எந்தவொரு படத்துக்கும் ஓப்பனிங் இருக்கும். சின்ன கவுண்டர், தேவர் மகன் மற்றும் பாரதிராஜா சார் படங்கள் பார்த்துதான் வளர்ந்தேன். அதில் ஒரு சாதியை எடுத்து அதற்குள் இருக்கும் பிரச்சினைகளை வைத்துதான் படம் எடுத்திருப்பார்கள். இன்றைக்கு சினிமா சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் இரண்டுமே அரசாங்கம் கைக்குப் போய்விட்டது.
சாதிகள் இல்லை என்று சொல்கிற ஒரே ஒரு ஊடகம் சினிமாதான். ஒருவருக்கு ஒருவர் என்ன சாதி என்று கேட்டுக் கொள்ளாமல் நட்பாகி வளர்ந்துள்ளோம். அனைவருக்குமே அவர்களுடைய சாதி பெரிய சாதிதான் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். உங்கள் சாதியை உயர்த்திப் பிடிக்க இன்னொரு சாதியைத் தாழ்த்திப் படம் பண்ணாதீர்கள். அப்படிச் சில படங்கள் வந்ததினால், இப்போது என்ன சாதி என்று சொல்லச் சொல்கிறார்கள்.
ஒரு இயக்குநர் மூலமாக முளைத்த 4 இயக்குநர்கள் இருக்கிறார்கள். தயவுசெய்து கலைப் படமாக எடுங்கள். கமர்ஷியல் படமாக எடுங்கள். சாதிப் படமாக எடுக்காதீர்கள். சில படங்கள் சாதியைச் சொல்லி மார்தட்டிக் கொள்கின்றன. ஆகையால் இந்த சினிமா ஊடகத்தைத் தப்பாகப் பயன்படுத்தாதீர்கள்.
அனைத்துத் தலைவர்களும் சாதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் குருநாதர் மூலமாக ஜெயித்துவிட்டு சாதி, சாதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரெளபதி என்ற படத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதிலும் பிரிவினைக் கொண்டு வந்தது யார்? சாதியைக் கையில் எடுக்காதீர்கள். கேடயமாகப் பயன்படுத்தாதீர்கள். நல்ல படம் எடுங்கள், அது பெரிய ஊன்றுகோலாக இருக்கும்''.
இவ்வாறு தருண் கோபி தெரிவித்துள்ளார்.